Tuesday, March 31, 2020

Verse



What else I need?


Women's day verse



Wednesday, March 7, 2018

Happy womens day

Friday, January 6, 2017

போதும் பொண்ணு..

கல்விக்கு ஸரஸ்வதி
செல்வத்துக்கு லஷ்மீ
வீரத்துக்கு மலைமகளென
பெண் தெய்வங்களைப் போற்றும்
இந்த தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..


•‘மாதராய்ப் பிறந்திட
மாதவம் செய்திடல் வேண்டும்’
போற்றிய கவிஞர்
பிறந்த தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..


•தேனினும் இனிய குரலுடையாள்
'தேன்மொழி'
கார்முகில் என
கருங்கூந்தல் உடையாள்
'கார்குழலி'
மதிமுகம் கொண்ட பெண்
'மதிவதனி'
என்றெல்லாம் இனிய பெயரிட்ட
இந்த தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..


•தாய்மையை
அண்ணன் தங்கை பாசத்தை
தாய்மாமன் என்று உறவுகளை
போற்றுகின்ற
புனித இத்தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..


•பிற நாடுகளெல்லாம்
'தந்தை நாடு' எனும்போது
தன் தேசத்தை
'தாய்நாடு' என்றும்
தன் மொழியை
'தாய்மொழி' என்றும்
போற்றுகின்ற
புனித இத்தேசத்திலா
இந்த பெயர்..
'போதும் பொண்ணு'..


•பெண்மையைப் போற்றுவோம்
பெண்ணின் மேன்மையைப்
போற்றுவோம்..
பாரத மாதாவின்
மனம் குளிர்ந்திட
வரலாற்றிலிருந்து
நீக்குவோம் இப்பெயரை
'போதும் பொண்ணு'..

- வைகறை நிலா

Monday, October 10, 2011



இனிய பாடல் கேட்கும்போது
உந்தன் ஞாபகம்..

அழகிய ஓவியம் பார்க்கும்போது
உந்தன் ஞாபகம்..

தென்றல் என்னைத் தீண்டும்போதும்
உந்தன் ஞாபகம்..

எந்தன் கடமைகள்
எதனையும் செய்யவிடாமல்
எப்போதும் நெஞ்சில் நிறைந்திருக்கிறது
உந்தன் ஞாபகம்..

Monday, August 9, 2010

எங்கள் இந்தியா..


"சாதிகள் இல்லையடி பாப்பா"
இது வகுப்பறையில்..
"நீங்கள் எந்த ஜாதி"
இது அட்மிஷன் அறையில்..

"வரதட்சணையை ஒழிப்போம்"
இது மேடைப் பேச்சில்..
"எத்தனை சவரன் போடுவீர்கள்"
இது பெண் பார்க்கும் வீட்டில்..

"தீண்டாமை ஒரு பாவச்செயல்"
இது பள்ளிபாட புத்தகத்தில்..
"இருவகை குவளைகள்"
இது எங்கள் ஊர் தேநீர் கடைகளில்..

எனினும் நாங்கள்
பெருமையாக(பொய்யாக) சொல்வோம்
வேற்றுமையில் ஒற்றுமை
இதுதான் எங்கள் இந்தியா..

Monday, June 28, 2010

வார்த்தைகளைத் தேடுகிறேன்…


அழகாய் பேச
தமிழில்
ஆயிரம் வார்த்தைகள்
இருந்தும்
ஒன்று கூட
கிடைப்பதில்லையே
நீ
அருகினில்
இருக்கும் பொழுது…

Saturday, April 17, 2010

நியாயமா...மானிடா...?

மேகம் தந்தேன்
மழை தர...
அதனையும் கலைத்திட
கற்றுக்கொண்டாய் நீ..

உலோகம் தந்தேன்
நற்கருவிகள் செய்திட..
தீய கருவிகள் செய்தாய் நீ
தீவிரவாதம் வளர்க்க...

செடிகள் மரங்கள்
செழிக்க வைத்தேன் நான்..
அத்தனையும் அழித்துவிட்டு
மழையில்லை
கடவுளுக்கு கண்ணில்லை என்கிறாய்..

இயற்கை செல்வத்தோடு
மழையை பொழிந்தேன் நான்
கடலில் விட்டுவிட்டு;
வறட்சி வந்ததும்
கடவுளுக்கு கருணையில்லை என்கிறாய்..

தவறெல்லாம் உன்மீது
பழிமட்டும் என்மீதா..
நியாயமா..மானிடா..?

Tuesday, March 16, 2010

வாழ்க்கையின் பாதையில்..


வாழ்க்கையின்
பாதையில்
வந்து போகின்றனர்
பலர்..

நீங்கா நினைவுகளை
நெஞ்சில்
விட்டுச் செல்கின்றனர்
சிலர்...

Thursday, March 4, 2010

என் இதய வானில்..


என் இதய வானில்
அன்பெனும் பறவைகள்..

என் இதய கடலில்
அன்பெனும் அலைகள்..

என் இதய தோட்டத்தில்
அன்பெனும் மலர்கள்..

என் இதய வீட்டில்
அன்பு நிறைந்த மனிதர்கள்..

Thursday, February 25, 2010

அலைவீசும் கடலோரம்..


அலைவீசும் கடலோரம்
அமரும்போதும்
உந்தன்
அருகாமை ஏக்கம்..

மலர்ந்து சிரிக்கும் ரோஜாக்களை
பார்க்கும்போதும்
உந்தன்
புன்னகைத் தாக்கம்..

உந்தன் பேச்சு
உந்தன் முகம் என்று
உள்ளம் முழுதும் உன்
நினைவுத் தேக்கம்..

காலை மாலை
செய்யும் செயல்களை
தினம்
தடுமாற வைக்கும்..

Wednesday, February 3, 2010

நீ வரும் வழியில்..


நீ
வரும் வழியில்
காத்திருக்கிறேன்..
என்னைப் போலவே
இங்குள்ள
செடிகளும்
மலர்களும்
மலரின் இதழ்களும்
உன் இதழ் சிரிப்பைக் காண…

Sunday, January 31, 2010

ஒரு மரம் பேசுகிறது...


மனிதனே
உனக்கு பிடித்தமானவருக்குத்தான்
உதவுகிறாய் நீ...
நல்லவனோ கெட்டவனோ
நிழல் தருகிறேன் நான்...

மழைச்செல்வம் தேடித்தருவதும்
இயற்கை அழிவிலிருந்து
உன்னைக் காப்பதும்
நானில்லையா?

மலர்கள் ...ரசிக்க...பூஜிக்க
கனிகள்...தித்திப்பாய் ...சுவைத்திட
இன்னும் இன்னும்
நன்மைகள் பலப்பல...

எனினும் ...மானிடனே
அற்ப காரணத்துக்கெல்லாம்
அடியோடு வீழ்த்துகிறாயே...
சிசுக் கொலைதான்
பாவமா...
என்னைக் கொல்வது
பாவமில்லையா...?

Wednesday, December 23, 2009

நாளை முதல்..


நாளை முதல்
'என்னை விட அவள்தான் முக்கியமா' என்று
என்னிடம் நீ சண்டையிடமாட்டாய் உமா.

நாளை முதல்
'எவ்வளவு நேரம் உன்னை தேடுவது.
தூங்குவதற்கு நேரமாகவில்லையா'
என்று நீ என்னை தேடி வரமாட்டாய் ரேகா.

நாளை முதல்
'எவ்வளவு நேரம் தூங்குவாய்.
எழுந்திரு.எருமை' என்று
என்னிடம் நீ கத்த மாட்டாய் சுகந்தி.

நாளை முதல்
'மேரி மாதாவுக்கும் கிருஷ்ணர்
சிலைக்கும் பூ வாங்கி வந்தேன்' என்று நீ
என்னை தேடி வரமாட்டாய் டெய்சி.

இன்று கல்லூரியின் கடைசி நாள்..

Saturday, November 21, 2009

நிலா



ஜோடி ஒன்று
தேடாத
தனிப் பறவை.

Sunday, November 15, 2009

மல்லிகையும் மட்டனும்



நடக்கும் பாதையில்
மல்லிகையோ ரோஜாவோ
மிதிக்காமல் செல்கிறோம்..

சிறிய எறும்புதான்
கடிக்காது எனினும்
விலகிச் செல்கிறோம்..

ஆட்டுக்குட்டியை
ஆசையாய் வருடி
உணவு தருகிறோம்..

ஆனாலும் ஆசையாய்
சாப்பிடுகிறோம்
மட்டனும் சிக்கனும்..

Sunday, November 8, 2009

மலை..


முகில் தேவதை
துயில் கொள்ளும்
படுக்கையறை...

அக்கரைப் பச்சை

வெயிலடிக்கும்போது
மழைக்காக
ஏங்கும் மனசு
மழை பெய்யும்போது
வெயிலுக்காக ஏங்கும்..